திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 2012ம் ஆண்டு முதல், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த 541 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 3 பார்வையற்ற ஆசிரியர்கள் உட்பட 24 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் தற்போது, அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் சிறந்து விளங்குகின்றனர்.
இங்கு, மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு, ஓவியம், பொது அறிவு, கதை, கட்டுரை, யோகாசனம், தியானம் மற்றும் குத்துச்சண்டை, சிலம்பம், சதுரங்கம், கைப்பந்து மற்றும் பூப்பந்தாட்டம், வினாடி வினா, பாட்டு போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட தனித்திறன் பயிற்சி ஆசிரியர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளியின் மாணவ, மாணவிகள் மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக குத்துச்சண்டை போட்டியில் 9ம் வகுப்பு மாணவி குண 19 முறை தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். கடந்தாண்டு தேசிய சப் ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஈராக் நாட்டில் நடக்க இருக்கும் ஆசிய குத்துச்சண்டை போட்டி குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், கைப்பந்து போட்டியில் 12ம் வகுப்பு மாணவி மோனிஷா, மாணவர்கள் நரேந்திரன், சிபிராஜ், சரவணன், ரோஹித், அரவிந்த், சிவா, நித்திஷ், ஹரிஷ், லோகேஷ், யுவராஜ், வசந்த் ஆகியோரும், பூப்பந்து போட்டியில் 9ம் வகுப்பு மாணவர்கள் அஸ்வின் குமார், சரண்ராஜ், கிஷோர், கெவின் பாலா, தாமோதரன், ஆகாஷ் ஆகியோரும் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
சிலம்பம் போட்டியில் பகர்தீஸ்வரன், இமையன், மோகன், ஹரி, இமயரசன், தமிழ்மாறன், கவுரிசங்கர் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். பேச்சுப் போட்டியில் 11ம் வகுப்பு மாணவி அஸ்வினி மாவட்ட அளவில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி கல்வியிலும் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் கடந்த 3 ஆண்டாக 86 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும், நாடகம், திருக்குறள் போட்டிகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு உறுதுணையாக பள்ளி தலைமை ஆசிரியர் செல்லம்மாள், விளையாட்டு ஆசிரியை பொற்கொடி மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.Ads by