சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள் மெர்குரிக்
சல்பைடு குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த மதி மற்றும் வேலூரைச் சேர்ந்த அஷ்மத் பாத்திமா ஆகிய இரு மாணவிகள் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்கள். இருவரும் நெருக்கமான தோழிகள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரையும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள், சக மாணவர்கள் பேசாமால் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் லேபில் உள்ள மெர்குரிக் சல்பைடை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

இரு மாணவிகளும் விடுதியில் மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்த மாணவி ஒருவர் இதுகுறித்து விடுதி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரு மாணவிகளையும் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து
வேப்பேரி போலீஸாருக்கு தெரியவர தற்கொலைக்கு முயற்சித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் கூறியதாக தெரியவருகிறது.