படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் உள்ளன. சிம்பு பிரமாதமாக சண்டைக் காட்சியில் நடித்து ஸ்டண்ட் மாஸ்டரின் பாராட்டை பெற்றுள்ளார்.
சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, படம் என்ன நிலையில் உள்ளது என்ற தகவலையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இரு படங்களை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக முடிவானது. முதல் படமாக நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை எடுப்பதாக அறிவித்தனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். கடைசி நேரத்தில், சிம்பு அசுரன் போன்ற ஒரு கதையில் நடிக்க விரும்ப, ஜெயமோகனின் கதையை தழுவி வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் புதிய படத்தை தொடங்கினர். உடல் மெலிந்து, அழுக்கு உடையில் சிம்பு இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் அமோக வரவேற்பை பெற்றது.
இதன் இரண்டாவது லுக் என, தொழிலாளர்களுடன் குறுகலான அறையில் சிம்பு படுத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. வழக்கமான என்டர்டெயின்மெண்ட்களை தவிர்த்து, அழுத்தமான கதையைக் கொண்ட படம் வெந்து தணிந்தது காடு என்ற எண்ணத்தை இவ்விரு புகைப்படங்களும் தோற்றுவித்தன. இந்நிலையில், வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டருடன் சிம்புவும், படக்குழுவும் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. படத்தில் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் உள்ளன. சிம்பு பிரமாதமாக சண்டைக் காட்சியில் நடித்து ஸ்டண்ட் மாஸ்டரின் பாராட்டை பெற்றுள்ளார் என்ற தகவலும் நேற்று வெளியானது.
படத்தின் இரண்டு ஷெட்யூல்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளார் கௌதம் வாசுதேவ மேனன். மூன்றாவது ஷெட்யூல்ட் மும்பையில் விரைவில் தொடங்குகிறது. வேகமாக படத்தை முடித்து அடுத்த வருட ஆரம்பத்தில் படத்தை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
தவிர ஐசரி கணேஷ் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தையும் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.