டெல்லியை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், ‘கீத் ஹப்’ என்ற வலைதளத்தில் தனது புகைப்படங்களை ஒரு கும்பல் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும், தன்னை போலவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் அந்த வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘பெண்களை அவமானப்படுத்துவதும், அவர்களுக்கு எதிராக சமூக வெறுப்புணர்வை தூண்டுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒரே குரலாக நின்றால் மட்டுமே இது சாத்தியப்படும். வருடமும், சூழலும் மாறிவிட்டன. இப்போது நாம் அனைவரும் கட்டாயம் உரக்க பேச வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.