தலைநகர் டெல்லி இருந்து ஜபல்பூர் சென்ற விமானத்தில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதிக்குள்ளாகினர். விமானம் ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கேபினில் இருந்து புகை வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் டெல்லியிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு இன்று அதிகாலை 6.15 மணி அளவில் SG-2862 ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் சுமார் 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று கேபினில் இருந்து புகை கிளம்பியது. இதனால் பயணிகளும், விமானக் குழுவும் அதிர்ச்சி அடைந்த நிலையில், விமானத்தை அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கினர். இதையடுத்து விமானம் சுமார் 7 மணி அளவில் மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இது தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது. அதில், பயணிகளை சுற்றி புகை சூழ்ந்த நிலையில், அவர்கள் செய்தித்தாள்கள், புக்லெட்டுகள் ஆகியவற்றை வைத்து புகையை விரட்டிவிடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விரிவான அறிக்கை தர வேண்டும் எனக் கோரியுள்ள விமானப் போக்குவரத்து ஆணையம், தொழில்நுட்ப கோளாறு தான் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்திருக்கும் எனக் கூறியுள்ளனர்.

 

சமீப காலத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இது போன்ற கோளாறு ஏற்படுவது இரண்டாவது முறை. ஏற்கனவே, கடந்த ஜூன் 19ஆம் தேதி, பாட்னாவில் இருந்து டெல்லி கிளம்பிய விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தீயால் விமானம் மீண்டும் பாட்னாவில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.