உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில், இந்தாண்டில் இதுவரையில் உயர் நீதிமன்றங்களில் 110க்கு மேற்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் நவம்பர் 1ம் தேதி கணக்கின்படி, 1,098 நீதிபதிகள் பணியிடங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இதில் தற்போது 692 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 406 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையிலான கால கட்டத்தில், உச்ச நீதிமன்ற கொலிஜியம் 100 நீதிபதிகளின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.

இறுதியில், 12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகளை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகும், பல்வேறு நீதிபதிகளின் பெயர்கள் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. நடப்பாண்டில் மட்டும் நாடு முழுவதும் கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் 110க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, உச்ச நீதிமன்றத்துக்கும் 3 பெண்கள் உள்பட 9 புதிய நீதிபதிகள் ஒரே நாளில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நியமிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு என ஒதுக்கப்பட்ட 34 நீதிபதிகளில், தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக, கடந்த 2016ம் ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை நடப்பாண்டில் முறியடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.