தூய்மை கரூர் திட்டத்தில் கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

தூய்மை ரூர் திட்டத்தின் கீழ் கரூர் நகராட்சிப் பகுதியில் சிறப்புத் தூய்மைப் பணி தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் நகராட்சி திருகாம்புலியூர் மந்தையில் இன்று (அக். 8ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புத் தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து, காலையே பணிக்கு வர அறிவுறுத்தி, அவர்கள் காலை சிற்றுண்டி எடுத்துக்கொள்வது குறித்தும், அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கரூர் நகராட்சியில் சிறப்புத் தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளது. நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 70,000 குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை வார்டுகளில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் 837 தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றப்படும். இதற்காக ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு ஒரு குழு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் கூறும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வார்கள்.

நகராட்சியில் 8 லாரிகள், 18 மினி வேன்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். கரூர் நகராட்சி குப்பைகளற்ற தூய்மை நகராட்சியாக மாற்றப்படும். கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்” என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சால்வையை மறுத்த அமைச்சர்

நிகழ்ச்சிகளில் யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் என அமைச்சர் பலமுறை தெரிவித்தும் தூய்மைப் பணியின்போது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஒருவர் சால்வை அணிவிக்க முயல, அதனை ஏற்க மறுத்த அமைச்சர், சால்வையை அவரிடமே திருப்பி வழங்கினார்.