Site icon Metro People

இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல; அவர்களுக்கு நாம் இருக்கிறோம் – முதல்வர் ஸ்டாலின்

இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் பேசியது போலவே நேற்றும் நானும் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என குறிப்பிட்டேன். இனி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும், அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்றைய தினம் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில், அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அடிப்படை வசதியில்லாமல் இருக்கும் இலங்கை தமிழர்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பழுதடைந்த 7,469 வீடுகள் 231 கோடி செலவில் கட்டித்தரப்படும். இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதில், முதற்கட்டமாக 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Exit mobile version