Site icon Metro People

கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிவு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மின்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கடன், எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆக. 09) காலை 11.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

“மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15ஆம் ஆண்டில் குறைவாக இருந்த தமிழகத்தின் கடன், அதற்குப் பிறகு பல மடங்கு அதிகரித்தது. அதிமுக அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுகக் கடனாக எடுக்கப்பட்டுள்ளது. மறைமுகக் கடன் எதற்காக எடுக்கப்பட்டது என்ற கேள்வி உள்ளது. மின்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கடன், எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது. மின்துறைக்கு 90% , போக்குவரத்துத் துறைக்கு 5% என, கடன் பெற அதிமுக அரசு உத்தரவாதம் தந்தது. டான்ஜெட்கோ, போக்குவரத்துக் கழகங்கள் ரூ.91 ஆயிரம் கோடிக்குக் கடன் பெற அரசு உத்தரவாதம் தந்தது. தமிழகத்தின் மின்வாரியத்தைவிட பிஹார் மின்வாரியம் நல்ல நிலையில் உள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தி, பிஹார், உத்தரப் பிரதேசத்தைவிட மோசமாக உள்ளது.

மாநில உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் என்பதைக் கொண்டே வருவாய் சதவிகிதம் கணக்கிடப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் உற்பத்தியில் 13.89% ஆக வருமானம் இருந்தது. 2018-19 அதிமுக ஆட்சியில் வருமானம் அதிக அளவில் சரிந்துள்ளது. தற்போதைய வருமானம், உற்பத்தியில் 4.65% ஆகச் சரிந்துள்ளது. மொத்த உற்பத்தியில் 8.7% என்ற அளவில் சரிந்துள்ளது.

4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிப் பங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே வருமானத்துக்கான வழிகள். மாநில வரி வருவாயில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. மாநில வரி வருவாய் வளர்ச்சி, திமுக ஆட்சிக் காலத்தில் 11.4% ஆக உயர்ந்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிந்துள்ளது”.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Exit mobile version