புதுச்சேரியில் கருணாநிதிஜெயலலிதா சிலைகள் அமைக்க பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று காலை கூட்டம் தொடங்கியதும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி அறிவுறுத்தினார்.

அதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “கடந்த ஆட்சியில் கருணாநிதி சிலை அமைக்க இடங்கள் பார்க்கப்பட்டன. கமிட்டி போட இரண்டு ஆண்டுகள் ஆக்கினர்.

சட்டப்பேரவைக்கு எதிரே சிலை அமைக்க முடிவு எடுத்தனர். ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். சிலை கமிட்டி இருக்கிறது. அதை மீண்டும் அமைத்து கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும்” என்றார்.

அதையடுத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “கருணாநிதி சிலையை நிச்சயம் செய்தாக வேண்டும். அதேபோல் ஜெயலலிதாவுக்கும் சிலை வைக்கும் கோரிக்கையுள்ளது. அதையும் செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதேபோல் பலரும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் சண்முகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோருக்கும் சிலை வைக்கக் கோரிக்கைகள் எழுந்தன.

பேரவைத் தலைவர் ராஜவேலு கூறுகையில், “பல தலைவர்களுக்கு சிலை வைக்கவேண்டும். முதல்வர் அதைச் செய்து வருவார்” என்று குறிப்பிட்டார்.