சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேயர் பிரியா ராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும்  பரிந்துரைகளை இக்குழு வழங்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி என்பது இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின், மாநகர சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயல்பாட்டுத் திட்டங்களுக்கான ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு 100க்கும் மேலான நகரங்களை தேர்ந்தெடுத்து, மக்களுக்கு இத்திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி அவர்களின் ஒத்துழைப்பைக் கோருவதுடன், இத்திட்டத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக செயல்படுத்தும்.

அந்தந்த மாநில அரசுகள் எளிதாக இணைந்து செயல்படும் வகையில் இத்திட்டத்தின் செயல்பாடுகளில் பங்கேற்றிட விரும்பும் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் எளிதில் புரிந்துகொண்டு செயலாற்றி நிறைவேற்றும் வகையில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் செயல்முறைக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.