அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 26) வெளியிட்ட அறிக்கை:

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டோமே தவிர, அதிபர் ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும், முதல்வருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய வகையில்தான் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் மக்களவை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட பிரதமருக்கும், அமைச்சரவைக் குழுவுக்கும்தான் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர், அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்படியும், ஆலோசனையின் படியும்தான் செயல்பட முடியுமே தவிர, நேரடியாகச் செயல்பட முடியாது.

குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரங்களைப் போல, மாநில அளவில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆளுநரைப் பொறுத்தவரை அமைச்சரவையின் அறிவுரையின் படியும், ஆலோசனையின் பேரிலும்தான் செயல்பட முடியும். நேரடியாகச் செயல்பட முடியாது. பெயரளவில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை ஆளுநர் ஏற்றிருந்தாலும், உண்மையான அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவுக்குத்தான் இருக்கிறது.

இந்நிலையில், மாநில அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாகச் செய்தி வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆளுநர், குடியரசுத் தலைவரின் நியமனத்தின் அடிப்படையில் பொறுப்புக்கு வந்தவரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக வாக்குகளைப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு பெற்றவர்தான் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கும், அமைச்சரவைக் குழுவுக்கும்தான் இருக்குமேயொழிய ஆளுநருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

1968 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராகத் தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயலாகும். தமிழக ஆளுநர் நியமனம் செய்யப்பட்டது முதல் அவர் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெறுகிற வகையில், அவர் தற்போது மாநில அரசுத் துறைகளின் செயல்பாட்டில் தலையிடுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது.

இத்தகைய தலையீடுகளின் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு இடையூறாகவும், மத்திய பாஜக அரசின் நலன்களைக் காக்கவும் முற்படுகிறார் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாகத் தமிழகத்தில் பாஜகவைக் காலூன்றச் செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துத் தந்த பி.ஆர்.அம்பேத்கர், ‘அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவையின் ஆலோசனையை மீறிச் செயல்படுவதற்கும் ஆளுநருக்கு உரிமையில்லை’ என்று தெளிவுபடக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த நிலையிலும் மத்திய பாஜக அரசின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படக் கூடாது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டதால், உச்ச நீதிமன்றத்தால் அவரது நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அதேபோல, டெல்லி மாநில ஆளுநரின் சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறியதால் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக, தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

எனவே, கடந்த 6 மாதங்களாக மக்கள் நலத் திட்டங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.