கேன்ஸ்: உக்ரைன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மேலாடை இல்லாமல் நிர்வாணப் போராட்ட நடத்தினார்.

அவர் தனது மார்பு, வயிற்றுப் பகுதியில் உக்ரைன் கொடி நிறப் பின்னணியில் ‘எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்’ என்று எழுதியிருந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் போராளி சிவப்புக் கம்பளப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.

அவர் முதுகில் ஸ்கம் (SCUM) என்றும் எழுதியிருந்தார். ஸ்கம் என்பது 1960களில் பிரசுரமான தீவிர பெண்ணியவாத கொள்கை குறிப்புகள். இப்போது அரை நிர்வாரணப் போராட்டம் நடத்திய பெண்ணின் வீடியோவும் ஸ்கம் என்ற பெயர் கொண்ட ட்விட்டர் ஹேண்டிலில் இருந்துதான் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த ட்விட்டர் ஹேண்டில் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“Three Thousand Years of Longing” என்ற ஜார்ஜ் மில்லரின் திரைப்படம் பிரத்யேக திரையிடலுக்கான நேரத்தில் அரங்கில் வெளியே இந்தப் போராட்டம் நடந்தது. இந்த சிறப்புத் திரையிடலுக்காக டில்டா ஸ்வின்டன், இட்ரிஸ் எல்பா போன்ற பிரபலங்கள் வந்திருந்த வேளையில் போராட்டம் நடைபெற்றது. இதனால், அங்கு சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழா தொடக்க நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், “சினிமா மவுனமாகத் தான் இருக்குமா? இல்லை எங்களுக்காக பேசுமா? ஒரு சர்வாதிகாரி இருந்தால், சுதந்திரத்துக்காக ஒரு போர் நடந்தால் அப்போது ஒற்றுமை அவசியம். சினிமா தன்னை இந்த ஒற்றுமை வளையத்தின் வெளியே நிறுத்திக் கொள்ளப் போகிறதா? இல்லை உள்ளே நின்று கேள்வி கேட்கப்போகிறதா?

இரண்டாம் உலகப் போரின் போது 1940ல், சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் “The Great Dictator” திரைப்படம் அடால்ஃப் ஹிட்லரை பகடி செய்தது. அந்த சினிமாவால் உண்மையான சர்வாதிகாரி அழிந்துவிடவில்லை. ஆனால் அப்போதைய சினிமா மவுனமாக இல்லை. அதற்காக நன்றி. இன்றைக்கும் சினிமா உயிர்ப்புடன்தான் இருக்கிறது, மவுனமாகிவிடவில்லை என்பதை நிரூபிக்க இன்னொரு புதிய சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? சினிமா பேசப்போகிறதா? இல்லை மவுனம் காக்கப்போகிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இரண்டாவது மாதம் முடிந்து மூன்றாவது மாதத்தை எட்டவிருக்கிறது. அங்கு ரஷ்ய வீரர்கள் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையமே கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான், கேன்ஸ் விழாவில் பிரான்ஸ் சமூக செயற்பாட்டாளர் நிர்வாணப் போராட்டம் நடத்தி உக்ரைன் மகளிர்க்காக குரல் கொடுத்துள்ளார்.