‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

‘வலிமை’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.