புதுச்சேரி பாகூர் காவல் நிலையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பணி செய்யாமல் இருக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு பகுதி போலீஸ் எஸ்.பி. விஷ்ணுகுமார் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் தெற்கு பகுதிக்குட்பட்ட பாகூர் காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் தெற்கு பகுதி எஸ்.பி விஷ்ணுகுமார் தலைமையில் இன்று (டிச. 18) நடைபெற்றது. பாகூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகூர் சரக இன்ஸ்பெக்டர் வரதராஜன், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்

பாகூர், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் போலீஸாருடன் எஸ்.பி. விஷ்ணுகுமார் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் எஸ்.பி. விஷ்ணுகுமார் பேசியதாவது:

‘‘எனது தலைமையில் பீட் போலீஸாருக்கு என்று தனி வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உருவாக்கப்பட்ட காரணம் பொதுமக்களுக்குச் சரியான முறையில் பணிகள் சென்றடைகின்றனவா? என்ற நோக்கத்துக்காகவே. ரோந்துப் பணிக்குச் செல்லும் போலீஸார் தங்கள் பகுதியில் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் விவரங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

புதுச்சேரியில் தற்போது தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இது தொடர்பான விழிப்புணர்வை பீட் போலீஸார் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ரோந்துப் பணி செல்லும் போலீஸார் அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற பாதுகாப்புக் காவலாளிகளிடம், தங்கள் பகுதிகளில் நடக்கும் அனைத்து சம்பவங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்களுடன் போலீஸாரும் நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக புகார் வந்த இடத்துக்குச் சென்று அந்தப் பகுதியில் விசாரித்துத் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பான தகவல்களைத் தனியாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு புகார்கள் வந்து அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’’

இவ்வாறு எஸ்.பி. விஷ்ணுகுமார் பேசினார்.

கூட்டத்தின் இறுதியில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பரிசு வழங்கப்பட்டது.