தமிழ்நாடு முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டி அமைக்க பாஜக நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவை பூத் அளவில் பலப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் இருந்து பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று குரல் குழு (வாய்ஸ் கான்பரன்ஸ்) கூட்டத்தில் பேசியதாவது:

2024 மக்களவைத் தேர்தல் பணியில் முக்கிய வேலையாக பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். பூத் அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என தேசியத் தலைவர் நட்டாவும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதனால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தற்போது வலிமையான பூத் கமிட்டி உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாளைக்குள் (பிப். 20) தலைவர் மற்றும் 12 நிர்வாகிகளுடன் வலிமையான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். பூத் கமிட்டியை அமைத்ததும் 30 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி வீதம் நியமனம் செய்ய வேண்டும். பூத்தில் உள்ள முக்கிய வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து அவர்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும்.

பூத் அளவில் வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்தி, அதில் மத்திய அரசின் திட்டங்கள், தேசிய அளவிலான செய்திகளை பகிர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.