Site icon Metro People

பள்ளி வாகனம் ஏறி மாணவன் பலியான வழக்கு: ஓட்டுநர், உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

சென்னையில் 7 வயது பள்ளி மாணவன் பலியான வழக்கில் வாகன ஓட்டுநர் பூங்காவனம், உதவியாளர் ஞானசக்தி ஆகியோரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர் ஞானசக்தி சிறையில் அடைக்கப்பட்டார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூங்காவனம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் தேறியதும் சிறையில் அடைக்கப்படுவார்.

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளான். வேனில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் சென்றவன், தான் மறந்து வைத்துவிட்டு வந்த சாப்பாட்டுப் பையை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி வந்துள்ளான். அப்போது ஓட்டுநர் பூங்காவனம், வேனை பார்க்கிங் செய்வதற்காக பின்னோக்கி இயக்கியுள்ளார்.

அப்போது, மாணவன் மீது எதிர்பாராத விதமாக வேன் மோதியுள்ளது. இதில், வேனின்பின் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.இதில் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகனப் பெண் பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் பூங்காவனத்திற்கு ஒரு பக்க காது கேட்காது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 64 வயதான அவர், மாநகராட்சி வாகன ஓட்டுநராக இருந்துவிட்டு ஓய்வுக்குப் பின்னர் இந்தப் பள்ளியில் ஓட்டுநராகச் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.

Exit mobile version