நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “சுகாதாரத்துறை அமைச்சர் என்பதை மறந்துவிட்டு, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் தான் இங்கு பேசினார் மா.சுப்பிரமணியன். நந்தனம் அரசு கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் மா.சுப்பிரமணியனின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றிச்சுற்றி செயல்பட்டு கொரோனாவை இந்தளவுக்கு தடுத்து நிறுத்தியிருக்கிறார் மா.சுப்பிரமணியன். நான் பேராசிரியராக இருந்த போது பேப்பர் திருத்தும் பணிக்காக நந்தனம் கலைக் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது பரிச்சயமானது இந்த கல்லூரி.

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுதான் கல்லூரிக்கே வர வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு தேவை. நேரடி வகுப்புகள் துவங்கப்படும் போது மாணவர்கள், பேராசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தான் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Mount Road Arts college என்று இருந்த கல்லூரியை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியாக மாற்றியவர் கருணாநிதி. என்ன கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றித் தருபவர் மா.சுப்பிரமணியன். விழுப்புரம் மாவட்டத்தையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.