அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த புரிதல் ஏற்படுத்தும் பணியில் 8 ஆண்டுகளாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஆசிரியர் ஆ.கருப்பையா.

திண்டுக்கல் மாவட்டம், நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் ஆ.கருப்பையா. பிற்கால பாண்டியர் காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் 14 நாட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் ஆற்றூர் நாட்டு பிரிவில் இப்பள்ளி அமைந்துள்ளது.

பிற்கால பாண்டியர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயில் சித்தையன் கோட்டையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகுமாம் குடகனாறு ஆற்றுப் படுகை முழுவதும் பல்வேறு வரலாறு எச்சங்கள் புதைந்து காணப்படுகிறது.

ஆசிரியர் ஆ.கருப்பையா, பள்ளிதொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் மேற்புற கள ஆய்வில் தனித்தும், குழுவினரோடு சேர்ந்தும் ஈடுபட்டு வருகிறார். தனது தொல்லியல் ஆய்வு மற்றும் மாணவர்களிடம் தொல்லியல் குறித்த புரிதல் ஏற்படுத்துவது பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பள்ளியை சுற்றிலும் மாணவர்கள் வசிப்பிடம் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வட்டம், கல் பதுகை, நடுகல், வட்டெழுத்துடன்கூடிய செக்குரல், பாறை ஓவியங்கள், கோட்டை, மூத்ததேவி சிற்பம், வீரக்கல் உள்ளிட்டவைகளின் படங்களை காட்டி இதுபோன்று இருக்கின்றனவா? என்பதை கேட்பேன்.

எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி எங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பகுதி பள்ளியில் மாணவர்களிடமும் இதுபோன்று கேள்விகள் கேட்கும்போது அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அங்கு சென்று குழுவினரோடு ஆய்வு செய்கிறோம்.

ஆத்தூர் வட்டார பகுதிகளில், நரசிங்கபுரம் செக்கு கல்வெட்டு, பெரும் கற்கால கல்வட்டங்கள், கற்பதுகை,மூத்த தேவி சிற்பம் பாறை ஓவியம், பினக்காடு பகுதியில் பன்றி குத்தி பட்டான் நடுகல், வட்டெழுத்து செக்குரல், செம்பட்டியில் வீர கற்கல் ஆகியன கண்டுபிடித்தோம். தொல்லியல் துறை இதுவரை ஆவணப் படுத்தாதவற்றை நாங்கள் அறிந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நான் கண்டறிந்த, மேற்புற கள ஆய்வில் கிடைத்தவற்றை எங்கள் குழுவின் உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான ரா. உதயகுமார் “பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் எனது கண்டுபிடிப்பு சார்ந்த 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

நாங்கள் ஆய்வில் கண்டறிந்தவற்றை மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எங்கள் பகுதியில் உள்ள மாணவர்களை அழைத்துச் சென்று காண்பிப்பதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறிந்தவற்றை ஆங்காங்கே உள்ள பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆய்வில் கண்டறிந்தவற்றின் சிறப்பு எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கிறோம்.

இதன் வாயிலாக மாணவர்களுக்கு தொல்லியல் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பயிற்சி வழங்கி வருகிறேன்.

மேலும் கல்வெட்டு படி எடுக்கும் முறையை நேரில் அழைத்துச் சென்று செயல் விளக்கம் கொடுத்து அதில் பயிற்சி அளித்தும் வருகிறேன். மேல்படிப்பாக அல்லது பகுதி நேர படிப்பாக தொல்லியலில் ஈடுபடவிரும்பும் மாணவர்களுக்கு தமிழகத்தில் தொல்லியல் கல்வெட்டியல் சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றிய வழிகாட்டுதலையும் கொடுக்கிறேன்.

மாநிலம் முழுவதும் 34 அருங்காட்சியங்கள் உள்ளது. மாணவர்களை அங்கு அழைத்து சென்று விழிப்புணர்வு கொடுக்கிறேன். தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியஅனைவரின் பொறுப்பு. அவரவர் பகுதியில் உள்ள தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் காவலர்களாக செயல்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் கருப்பையா.