அரசுப் பள்ளியைத் தேடி தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் வரவேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மதுரையில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குழந்தைகளின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருவதுதான் ஆசியர்களின் முக்கிய பணி, பள்ளிகள் தொழிற்சாலைகள் போல் இயங்க கூடாது. எதாவது சாதிக்க வேண்டும் என எண்ணத்தில் அமைச்சராக ஆனேன். உழவர்கள் போன்று ஆசிரியர்கள் செயல்பட்டுப் பணியாற்ற வேண்டும். கல்வி பயில அரசு பள்ளியைத் தேடி மாணவர்களும், பெற்றோரும் வர வேண்டும் என்ற நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை பொறுத்தவரை நம் மாநில மாணவர்கள் என்ன கல்வி தேவையோ அதை அரசு வழங்கும் என்று அன்பில் மகேஸ் பேசினார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசியதாவது:

கொரானாவுக்கு பின் அரசுப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலை பள்ளிகளில் உள்ளது. பள்ளிக் கல்வித் துறை வழங்கியிருக்கும் வளங்களை ஆசிரியர்கள் முதல் ஊழியர்கள் வரை சரியாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான அடிப்படை கல்வியைத் தரமாக வழங்கும் அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதுரையில் சிறப்பாக செயல்ப்படுத்துவேன்.

2025ம் ஆண்டிற்குள் உலக அளவில் கல்வியில் முதல் தரத்தில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்படுகிறது. அனைத்து மாணவர்கள் எழுத படிக்க மற்றும் எளிமையான கணிதத்தை தெரிந்திருக்க என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்