‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பின்போது மகேஷ் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

ஹைதராபாத், துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். இன்னும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதுவரை படத்தின் டீஸர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பின்போது மகேஷ் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைதரபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இதற்காக மகேஷ் பாபு சிகிச்சை பெற்றதாகவும், அப்போது மகேஷ் பாபுவின் காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் அமெரிக்கா செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மகேஷ் பாபு தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பை அவர் குணமாகும் வரை தற்காலிகமாக ‘சர்காரு வாரி பாட்டா’ குழுவினர் தள்ளி வைத்துள்ளதாகவும் பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மகேஷ் பாபு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #GetWellSoonMaheshAnna என்று ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here