மேகாலயாவில் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைப்பதில் ஒரு திடீர் திருப்பமாக எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த என்பிபி கட்சி தலைவர் கான்ராட் சங்மா, 32 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பகு சவுகானை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கான்ராட் சங்மா சமர்பித்த ஆதரவு கடிதத்தில், என்பிபி எம்எல்ஏக்கள் 26 பேர், பாஜகவின் 2 எம்எல்ஏகள், எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் 2, சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.

முன்னதாக, ஆளுநரைச் சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சங்மா “எனக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளது. பாஜக தனது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. இன்னும் சிலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஆட்சி அமைப்பதில் திடீர் திருப்பமாக வெள்ளிக்கிழமை மாலையில் எச்எஸ்பிடிபி கட்சி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாங்கள் ஊடக அறிக்கையில் பார்த்தபடி, எச்எஸ்பிடிபி எம்எல்ஏக்கள் மெத்தோடியஸ் திஹர், ஷாக்லியர் வார்ஜ்ரி ஆகிய இருவருக்கும் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை வழங்க கட்சி எந்தவித அங்கீகாரமும் அளிக்கவில்லை என்று எச்எஸ்பிடிபி கட்சியின் தலைவர் கேபி பன்ங்னியங், செயலாளர் பன்போர்லாங் ரிந்தாதியங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் எச்எஸ்பிடிபி கட்சிக்கு எந்தவித பங்கும் இல்லை. அதனால், எங்கள் கட்சி உங்களுக்கு வழங்கி வந்த ஆதரவினை இன்று முதல் திரும்பப் பெறுகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எச்எஸ்பிடிபி கடிதம் குறித்து என்பிபி கட்சி உடனடியாக எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் இருப்பதாக என்பிபி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, புதிதாக தேர்வாகியுள்ள யுடிபி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், எச்எஸ்பிடிபி, மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் வாய்ஸ் ஆஃப் பிப்பிள் பார்ட்டி (விபிபி) கட்சிகளின் எம்எல்ஏக்கள், கட்சித்தலைவர்களின் கூட்டம் ஷில்லாங்கில் வெள்ளிக்கிழமை நடந்தது.

என்பிபி மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கும், மாற்று கூட்டணி ஆட்சி அமைப்பதற்காகவும் நடைபெற்ற இந்த கூட்டம் யுடிபி தலைவர் லேக்மேன் ரிம்புயி வீட்டில் நடந்தது. இவர் முந்தைய என்பிபி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார். முந்தைய ஆட்சியில் யுடிபியும், எச்எஸ்பிடிபியும் அங்கம் வகித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா, “மாநிலத்தின் மக்கள் தெளிவாகவும், அழுத்தமாகவும் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இது மாற்றத்திற்கான மக்களின் ஆணை. மாநில மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

மேகாலயாவில் ஆட்சி அமைப்பதற்கு 31 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், இந்த கூட்டணியில் யுடிபி 11, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் தலா 5, விபிபி 4, எச்எஸ்பிடிபி 2 மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி 2 என 29 பேர் மட்டுமே உள்ளனர்.