பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை களுக்காக உள்ள சிறப்பு சேமிப்பு திட்டம் இது. இந்த சேமிப்பு திட்டத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தை தொடங்கி, அதன் பலனைப் பெறலாம்.

குறைந்தபட்ச தொகை

ஒரு ஆண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.250, அதிகபட்ச தொகையாக ரூ.1லட்சத்து 50 ஆயிரம் செலுத்தலாம். மேலும் 50 ரூபாய்களின் மடங்கிலும் தங்களுடைய எஸ்.எஸ்.ஒய் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ரூ.300, 350, 400, 450 என பணத்தை செலுத்தலாம். இந்தக் கணக்கு தொடங்கி 15 வருடம் வரை இவ்வாறு நாம் வரவு வைத்து கொள்ளலாம்.

இந்த கணக்கு தன் இயல்பு நிலையை தவறினால் அதாவது இன் ஆக்டிவ் என்ற வரவு – செலவு இல்லாத நிலைக்கு வரும்போது இதை நடைமுறைப்படுத்த அபராதம் ரூ.50-வுடன், எத்தனை வருடம் இன் ஆக்டிவாக இருந்ததோ அத்தனை வருடத்திற்கான குறைந்தபட்ச டெபா சிட் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்

தற்போது இந்த கணக்கில் செலுத்தப்படும் வைப்புத் தொகைக்கு வட்டிவீதம் 7.6 சதவீதம் ஆக உள்ளது. இக்கணக்கிற்கான வட்டி அந்த ஆண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். கணக்கு தொடங்கப்படும் பெண் குழந்தையின் 18 வயது வரை இந்த கணக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலராலும், 18 வயது பூர்த்தியான பிறகு அவர்களால் சுயமாகவும் கணக்கில் வரவு, செலவை மேற்கொள்ளலாம்.

ஒரு சில சூழ்நிலையில் குழந்தை இறக்க நேரிட்டால், இறப்புச் சான்றிதழ் கொடுத்து அந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். இறப்பு சான்றிதழ் கொடுக்கும் வரை அக்கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி சேர்த்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இறந்த தேதியிலிருந்து இந்த கணக்கு முடித்து தரப்படும். அதுவரை தபால் நிலையத்தில் உள்ள வட்டி சதவீதத்திலேயே கணக்கிட்டு கொடுக்கப்படும்.

அதுபோல கணக்கு தொடங்கி 5 வருடம் முடிந்த பிறகு மருத்துவ செலவிற்காக கணக்கை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை குழந்தைக்கு வயது 18 அல்லது 10-வது படித்து முடித்து இருந்தாலும் செலுத்திய தொகையில் 50 சதவீதத்தை தன் மேற்படிப்பிற்காக எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 21 வருடத்தில் இந்த கணக்கு முதிர்வடையும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.