ஓசூர் பகுதியில் கோடை மழையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலத்தை விட சந்தையில் காலிஃபிளவர் 50 சதவீதம் விலை குறைந்துள்ளது.

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் காலிஃபிளவர், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட், உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிகுந்த காய்கறிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி விற்பனைக்கு செல்கிறது. நல்ல லாபம் கிடைத்து வருவதால் காய்கறி உற்பத்தில் இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டு கோடையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில காய்கறிகளின் மகசூல் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.

இதுதொடர்பாக ஆவலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜு கூறியதாவது: ஒரு ஏக்கரில் காலிஃபிளவர்பயிரிட ஒரு நாற்று 80 பைசா விலையில் சுமார் 18 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படுகிறது. இவற்றுடன் உரம் மற்றும் வேலையாட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் செலவாகிறது.

காலிஃபிளவர் நாற்று நடவு செய்யப்பட்டு நன்கு பராமரித்து வந்தால் 55 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஏக்கரில் ஒரு மூட்டைக்கு 50 கிலோ என சுமார் 300 மூட்டை வரை அறுவடை செய்யலாம். வழக்கமாக கோடை காலத்தில் ஒரு மூட்டை (50 கிலோ) ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகும்.

தற்போது, பெய்து வரும் கோடை மழையினால் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கு காலிஃபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஒரு மூட்டை கடந்த காலத்தை விட 50 சதவீதம் விலை குறைந்து ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பயிரிட்ட செலவு கூட கிடைக்கவில்லை.