இஸ்ரோ உளவு வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி களுக்கு முன் ஜாமீன் வழங் கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மனு தாக்கல் செய்த நிலையில், வழக்கை உச்ச நீதிமன்றம் ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) உளவு பார்த்ததாக விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், விடுவிக்கப்பட்டார். அவருக்கு நஷ்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, வழக்கில் சிலரை திட்டமிட்டு சிக்க வைத்ததாக கேரள முன்னாள் போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பி.எஸ்.ஜெயப்பிரகாஷ், தம்பி எஸ். துர்கா தத், விஜயன், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

வெளிநாட்டு சதி..

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இஸ்ரோ உளவு வழக்கில் அந்நிய சக்திகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கெனவே தெரிவித்தது. இந்நிலையில், நேற்று இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ மறுஆய்வு மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் கோரினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.