பாலா – சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவிருப்பது உறுதியாகியுள்ளது.

பாலா – சூர்யா கூட்டணி ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. அதற்குப் பிறகு பாலா வெவ்வேறு நாயகர்களை இயக்கி வந்தாலும், அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் சூர்யா. இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிவது குறித்து நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.

2018-ம் ஆண்டு வெளியான ‘நாச்சியார்’ படத்துக்குப் பிறகு பாலா இயக்கத்தில் இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அவருடைய ‘வர்மா’ திரைப்படம் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த கரோனா காலத்தில் மீண்டும் பாலா – சூர்யா இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சூர்யாவின் 2டி நிறுவனத்துக்காக பாலா ஒரு படம் இயக்குவது என்று முடிவானது. அதற்கான படப்பிடிப்பு இடங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்று வந்தன.

இதில் சூர்யா நடிக்கவுள்ளாரா அல்லது வெறும் தயாரிப்பு மட்டும்தானா என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.