ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலாஸ் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் குறிப்பிடத்தக்கவரான டெஸ்லா நிறுவன CEO எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க கடந்த மாதம் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் முயற்சியை தடுக்க ட்விட்டர் நிர்வாகக் குழு முதலில் முயன்றது. எனினும், பின்னர், அது தனது முயற்சியை கைவிட்டது. இதனால், ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் சென்றால், அதில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் போலி கணக்குகள் நீக்கப்பட வேண்டும் என எலான் மஸ்க் ஏற்கனவே கூறி இருந்ததால், இத்தகைய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த மாத தொடக்கத்தில் ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகின. அதில், மொத்த கணக்குகளில் 5 சதவீதம் அளவுக்கு போலி கணக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி, ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.