நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 168 ரன்களை எடுத்தது. அதன் மூலம் இது உறுதியாகி உள்ளது.
சூப்பர் 12 – குரூப் 1 பிரிவில் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படாமல் 7 புள்ளிகளை பெற்றுள்ளது நியூஸிலாந்து. முக்கியமாக அந்த அணியின் நெட் ரன் ரேட் +2.113. ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் அயர்லாந்து அணியை வென்றது நியூஸிலாந்து. அதே நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.
ஃபின் ஆலன், டெவான் கான்வே, வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், மிட்செல், நீஷம் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் பலம் கொடுக்கின்றனர். போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற வீரர்கள் பவுலிங்கில் நம்பிக்கை கொடுக்கின்றனர்.
ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறது நியூஸிலாந்து அணி. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி, 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என முக்கியமான ஆட்டங்களில் நியூஸிலாந்து விளையாடி உள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானை 106 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும்.