ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களைத் தலிபான்கள் கடுமையாகத் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து, காபூலில் இளம்பெண்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். சுதந்திரம், பாகிஸ்தானுக்கு மரணம் போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில் இந்தப் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.

தலிபான்களால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடிலாட் ராஸ் என்ற பத்திரிகையைச் சேர்ந்த நிமத் நக்தி (28), தகி (22) என்ற இரு பத்திரிகையாளர்களும் தலிபான்களால் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து அவர்கள் கூறும்போது, “நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அவர்களிடம் கூறினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றே நினைத்தோம்” என்று தெரிவித்தனர்.

ஆப்கனில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதி அளித்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.