Site icon Metro People

தமிழகத்தில் 2026-ல் பாமக தலைமையில் ஆட்சி: அன்புமணி உறுதி

 தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமைப்போம் என்று கட்சித்தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட பாமகநிர்வாகிகளுடன், கட்சித் தலைவர் அன்புமணி கலந்துரையாடும் நிகழ்ச்சி, தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடிய அன்புமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு எடுத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சென்னை மாநகரில் மழைநீர்வடிகால் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தலா ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட 10 ஏரிகளை அரசு உருவாக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமான மசோதாவை ஆளுநர் தாமதம் செய்யாமல் கையெழுத்திட்டு சட்டமாக்க வேண்டும். 55 ஆண்டு காலம் இரு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்றமனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் உறுதியாக ஆட்சிஅமைப்போம். அதை நோக்கிதான் எங்கள் அரசியல் பயணத்தை ‘பாமக 2.0’ மூலம் நடத்துகிறோம்.

அதிமுக ஒரு பக்கம் நான்காக பிரிந்து இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுஆகிவிட்டது. இன்னும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆளுநரை முதல்வர் சந்தித்து, என்ன பிரச்சினை இருந்தாலும் அதை சுமுகமான முறையில் தீர்த்து, தமிழக நலன் கருதி இருவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

சென்னைக்கு 2-வது விமானநிலையம் வேண்டும் என்பது பாமகவின் கொள்கை முடிவு. ஆனால்,பரந்தூர் பகுதியில் 2-வதுவிமான நிலையத்தை அமைப்பதற்கு பதில், திருப்போரூர் பகுதியில் அரசு நிலங்கள் அதிகம் உள்ளது. துறைமுகம் பக்கத்திலேயே அந்த நிலம்கிடைக்கிறது. அந்த நிலத்தில் விமான நிலையம் கொண்டுவரலாம். ஆனால், அங்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் விமான நிலையம் கொண்டுவர முடியாது என்கிறார்கள். விவசாயத்தை அழித்து, சுற்றுச்சூழலை அழித்து வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Exit mobile version