டெல்லியில் நடைபெறும் போராட் டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத் தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றனர்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல மாதங்களாக போராடி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழியனுப்பி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. விவசாய நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் இதுபோல தொடர் போராட்டம் நடைபெற்றதில்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

அதுபோல தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று சென்னையில் இருந்து ரயிலில் டெல்லி செல்கின்றனர். இப்போராட்டம் நிச்சயம் வெல்லும்” என்றார்.