தமிழகத்தைப் பொருத்தவரை புதிய கல்விக் கொள்கை என்பது, நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவாக வலியுறுத்தியிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கையில், பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை தாய்மொழியில் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “2010-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தேன், அந்த ஆண்டே ஒரு அரசாணை வெளியிடப்பட்டு தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் அறிமுகபடுத்தப்பட்டிருக்கிறது. அந்த தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2010-ம் ஆண்டிலேயே இது உள்ளது, இதுவொன்றும் புதிதல்ல. தொழில் படிப்புகளை தமிழ்வழியில் படிப்பது எல்லாம் ஏற்கெனவே தொடங்கிவிட்ட ஒன்றுதான். இதுஎதுவும் நம் மாநிலத்தில் புதிதாக நுழையவில்லை.

தமிழக முதல்வர் மிக தெளிவாக உத்தரவிட்டிருக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது என்பது உண்மை. எனவே தமிழ்நாடு கல்விக் கொள்கை, நாம் இதுவரை பின்பற்றிய முறையில் எந்த தவறும் இல்லை. பிளஸ் 2 தேர்வு, 3 ஆண்டு கால பட்டப்படிப்பு, 2 ஆண்டு கால மேல்படிப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆகவே, தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அந்த குழு ஆரம்பக் கல்வி, உயர் கல்வி மற்றும் தமிழகத்தில் இருக்கின்ற சில மாற்றங்களை வளர்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து அதுதொடர்பாக முதல்வர் அறிவிப்பார்.

எனவே தமிழகத்தைப் பொருத்தவரை புதிய கல்விக் கொள்கை என்பது, நடைமுறைக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரை நேருக்கு நேர் கேட்டவர் தமிழக முதல்வர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எல்லாம் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மொத்தமுள்ள 55 மத்திய பல்கலைக்கழகங்களில் 22 மத்தியப் பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்த வேண்டாம் என்றுகூறி மறுத்துள்ளனர். இதனால்தான் நாம் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று கூறினோம்.

கலை,அறிவியல் படிப்புகளுக்கெல்லாம் நுழைவுத் தேர்வு நடத்துவது எல்லாம் அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் தமிழக முதல்வர் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் வலியுறுத்தியுள்ளார். மாநிலப் பட்டியலில் கல்வி கொண்டுவரப்பட்டால் இவையெல்லாம் சரியாகிவிடும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் தமிழகம் இல்லை என்று அவர் கூறினார்.