தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் பிராந்திய ஏற்றுமதி வழங்கும் விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக மிக அவசியம். இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் 27 விழுக்காட்டுக்கு அதிகமாக பங்களிப்பை தருகிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்த பங்கு 35 விழுக்காட்டை தாண்டும் என்று நான் நம்புகிறேன்.

தென் மண்டலத்தில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழகம் 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த இலக்கை அடைய ஏற்றுமதி வர்த்தகம் அதிகம் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். இதை 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இதற்காக பல முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. மாவட்டம் வாரியாக ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக துறை சார்ந்த ஏற்றுமதி வழிகாட்டி கையேட்டை உருவாக்க இந்த அமைப்பு உதவ வேண்டும். 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும். இதை அரசு இந்த அமைப்பும் இணைந்து நிச்சயம் நிறைவேற்ற முடியும்.” இவ்வாறு பேசினார்.