கோவையில் நேற்று நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. தமிழக அரசின் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியாவிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் தமிழகம் முதல் நிலையில் இருக்கின்றது.

கல்வித்துறைக்கும், கூட்டுறவுத் துறையின் மூலம் நிறைய உதவிகள் செய்துள்ளோம். கரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் நிவாரணம் 99.9 சதவீதம் கூட்டுறவு ஊழியர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. 2.13 லட்சம் கார்டுதாரர்களுக்கு உதவித்தொகை கொடுத்துள்ளோம். நியாயவிலை கடைகளில் தரமான அரிசியும், அனைத்து விதமான பொருட்களும் வழங்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் தொடர்பாக இதுவரை 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் என யார் சொன்னாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

6,500 பணியிடம்: கூட்டுறவுத் துறையில் உள்ள கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் விரைவில் 6,500 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். அத்தியாவசிய தேவை ஏற்படும் இடங்களில் புதிய நியாயவிலை கடைகள் அமைக்கப்படும். 10 வீடுகள் இருந்தாலும் அங்கு சென்று பொருட்கள் கொடுக்கப்படுகின்றன.

கூட்டுறவுத்துறை குறித்து மக்கள் யாரும் குறை சொல்லவில்லை. மக்கள் மிக திருப்தியாக இருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகள்போல வேறு எப்போதும் இத்துறையில் பணிகள் நடந்ததில்லை. கழிப்பிட வசதியுடன் புதிய நியாயவிலைக் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

துறை குறித்து குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கண்விழித்திரை மூலம் நியாய விலைக்கடையில் பொருள் வழங்கும் முறை சென்னை, அரியலூர் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.