சென்னை: எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆலோசனையில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் பேசிய முதல்வர்,

போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் தேவை:

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறந்த கவனம் செலுத்த வேண்டும். முழு ஆற்றலையும் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை தடுக்க வேண்டும். போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை தடுத்தாக வேண்டும். போதை மருந்துகள் விற்பனையாவதையும், பயன்படுத்துவதையும் தடுத்தாக வேண்டும் என்றார்.

எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது:

எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறை விஷயங்களில் வளர்ந்து விடக்கூடாது. போதைப்பொருட்களை பயன்படுத்த கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. போதை என்பது அதை பயன்படுத்தும் தனி மனிதனின் பிரச்னை அல்ல. அது சமூக பிரச்சனை. சமூகத்தில் குற்றங்களை தடுக்க போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும். போதைப்பொருள் தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் நடைபெற காரணமாக உள்ளது. போதைப்பொருள் தான் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களுக்கு தூண்டுதலாக உள்ளது. போதை பொருள் பழக்கம் என்பது சமூக தீமை, நாம் அனைவரும் சேர்ந்து தடுத்தாக வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பதை தடுக்க வேண்டும்:

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனையாவதை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்க மாட்டேன் என்று வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். போதைப்பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் போலீஸ் கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போதைப்பொருள் விற்பவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்:

போதைப்பொருள் விற்பவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். போதைப்பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் வருவதை தடுக்க வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் சமூக நல அமைப்புகள் ஈடுபட வேண்டும். போதைப்பொருள் இல்லாத சமுதாயமாக உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.