தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காவல் உயர் அதிகாரிகள் வாயடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. முன்னதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அண்ணாமலை, கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல். வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையில் காவல் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். நேற்று பிற்பகலில் கோவை வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அண்ணாமலை அளித்தப் பேட்டியில் தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காவல் உயர் அதிகாரிகள் வாயடைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

அந்தப் பேட்டியில் அவர், “கோவையைத் தாண்டியும் தீவிரவாதம் படர்ந்து கிடக்கிறது. அதனால் என்ஐஏவிடம் விசாரணை சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லா ஆதாரங்களையும் முன்வைத்தோம். அறிவியல்பூர்வமாக நடந்ததை விளக்கினோம். அதன் பிறகு முதல்வருக்கு வழக்கை என்ஐஏக்கு பரிந்துரைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ஏற்கெனவே நாங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதினோம்.

எங்கள் கட்சியின் கவலை எல்லாம் இந்த அரசின் மனப்பாங்கு தான். 48 மணி நேரமாக இந்த அரசு மவுனமாக இருந்தது. இந்த சம்பவத்தை ஒரு சிலிண்டர் விபத்து என்று தான் கூறியதோடு தமிழக டிஜிபியையும் அவ்வாறே கூறவைத்தது. இது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதுபோன்று நடந்ததில்லை.

இதுவரை தமிழகத்தில் இப்படியொரு திறனற்ற அரசை நாங்கள் பார்த்ததில்லை. மாநிலத்தின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லாமல் இந்த அரசு இருந்துள்ளது. அதனால் தான் தமிழ் மண் அனைத்துவிதமான தேச விரோதிகளுக்கும் ஒரு சொர்க்கபுரியாகி இருக்கிறது. தமிழக அரசு நடந்ததை மறைத்து இதுபோலவே மெத்தனமாக இருந்தால் நிச்சயமாக அது அடுத்தடுத்த தாக்குதல்களுக்கே வழிவகுக்கும்.

இந்தச் சம்பவம் நடந்தது முதலே நாங்கள் (பாஜக) இது பயங்கரவாத தாக்குதல் என்று சொல்லிவருகிறோம். ஆனால் போலீஸார் சிலிண்டர் விபத்து என்றே கூறி வந்தனர். பின்னர் நாங்கள் ஒருபடி மேலே சென்று இது தற்கொலைப் படை தாக்குதல் என்றோம். அதற்கு நாங்கள் ஆதாரத்தையும் தந்தோம். உயிரிழந்த ஜமீஷா முபின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்த மெசேஜை சுட்டிக் காட்டினோம். அது ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் பயங்கரவாதிகள் வழக்கமாக பயன்படுத்தும் வாக்கியம் என்பதை சுட்டிக் காட்டினோம். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் இந்த மெசேஜை வைத்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை உலகிலேயே தலைசிறந்தது. ஆனால் அரசாங்கம் அவர்களை குழந்தைகளாக்கி வைத்திருக்கிறது. காவல்துறை அரசு சொல்வதை சொல்கிறது. அது பொய் என்று தெரிந்தும் சொல்கிறது. நானும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளேன். என்னைப் பொருத்துவரை காவல் அதிகாரிக்கு ஒழுங்காக பொய் சொல்ல வராது. இந்த வழக்கில் அவர்கள் பொய் சொல்ல வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: தமிழகத்தில் மிக மோசமான பாதுகாப்பு அரணை வைத்திருப்பதற்காக முதல்வரே பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறுபான்மையினரை எப்போதும் சரிகட்டும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது. அண்மையில் கொங்கு மண்டலத்தில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. அவற்றிற்கு பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா தான் காரணம் என்றோம். அதையும் புறந்தள்ளினர். அதை திமுக அமைச்சர்கள் சிலரின் பேச்சு கேலிக் கூத்தாக இருந்தது. பாஜகவே இந்த சம்பவங்களை அரங்கேற்றின என்று கூறினர். இன்னொரு அமைச்சர், அண்ணாமலை தான் எல்லாம் செய்கிறார் என்றார். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு அடுத்து என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் தான் இருக்கிறது.

நேற்று நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைத்த தகவல்கள் எல்லாமே நிச்சயமாக காவல்துறையினரால் பகிரப்பட்டது தான். காவல்துறையில் உள்ள நேர்மையான சில அதிகாரிகள் கொடுத்த ஆதாரங்களைத் தான் நாங்கள் வெளியிட்டோம். அவர்களில் சிலரே எங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். தயவு செய்து நீங்களாவது இவற்றை வெளிக்கொண்டு வாருங்கள். எங்கள் வாயடைத்துவிட்டார்கள் என்றார்கள். வாக்களித்த மக்கள் திமுக அரசை மன்னிக்கமாட்டார்கள். இவர்கள் சிறுபான்மையினரை என்னதான் தாங்கினாலும் கூட அவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். இங்கு யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தீவிரவாத செயல்களைச் செய்பவர்கள் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ இருக்க முடியாது. யாரோ சில அடிப்படைவாதிகள் செய்வதே தீவிரவாதம்.

தமிழக உளவுத்துறைக்கு முக்கியமான வேலை எல்லாம் அண்ணாமலை காலையில் எத்தனை இட்லி சாப்பிடுகிறார். எவ்வளவு சாம்பார் ஊற்றிக் கொள்கிறார் என்ற தகவல் மட்டும் தான். இதுதான் தினசரி அறிக்கையாக தயாரிக்கின்றனர். இதற்குப் பதிலாக 10 சதவீத கவனமாவது பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலுத்தியிருந்தால் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருக்கும். காவல்துறைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அந்த மாண்பை அவர்கள் இழக்கக் கூடாது. அவர்கள் அரசின் அழுத்தங்களுக்கு கட்டுப்படுக்கக் கூடாது.

சட்டம் ஒழுங்கு நிலவரம் எப்படி? தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்றால் கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் கோயிலில் கொடுமை இருந்ததாம். அதுபோல் நீதி கேட்டு முதல்வரிடம் சென்றால் முதல்வர் அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பாராமுகம் காட்டினால் எங்கே செல்ல முடியும். தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஈரோட்டில் கணபதி ஊர்வலத்தின் போது பாரிஸ் டிரக் அட்டாக் ஸ்டைலில் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்போது கோவையில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது. இப்படியாக நடந்து கொண்டிருக்க தைரியம் திமுக அரசால் கொடுக்கப்படுகிறது. திமுக அமைச்சர்கள் கூட்டங்கள்தோறும் நாங்கள் இருக்கிறோம், யாருக்கும் அஞ்ச வேண்டாம். காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது என்று பிரச்சாரம் செய்கின்றனர். இன்று தமிழகத்தில் ஒரு சாமான்யன் திமுக கட்சிக்காரருக்கு தெரியாமல் ஒரு புகார் கொடுத்துவிட முடியாது. காவல்துறையில் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் வாயடைக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு நிகரான தமிழக காவல்துறையை சுதந்திரமாக இயங்கவிட வேண்டும்” என்றார்.