அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் போக்ஸோவில் இன்று (நவ 24) கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்றதாக தலைமையாசிரியையும் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, உடையார்பாளையம் அடுத்த பிலிச்சுக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன்(35) என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தலைமையாசிரியை ராஜேஸ்வரி( 53) வசம் மாணவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவி மற்றும் தமிழாசிரியரை அழைத்து பேசிய ராஜேஸ்வரி, இதனை பெரிது படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், இன்று பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் போலீஸார், அருள்செல்வனை போக்ஸோவிலும், சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமையாசிரியை ராஜேஸ்வரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அருள்செல்வன் கடந்த மாதம் அதே பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை‌ மேற்கொண்டனர்.