அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கணினி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஆசிரியா்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2020- 21ஆம்‌ கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு விண்ணப்பங்கள்‌ இணையவழி வாயிலாகப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்‌ தமிழ்‌ வழி பயின்றோருக்கான சான்றிதழ்‌ சார்ந்து மென்பொருளில்‌ மாற்றம்‌ செய்ய வேண்டியுள்ளதாலும்‌ மேலும்‌ பல்வேறு விண்ணப்பதாரர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கவும்‌ முதுகலை ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை – 1 மற்றும்‌ கணினி பயிற்றுநர்‌ நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கான கடைசித் தேதி 17.10.2021-ல் இருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதல் முறையாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.