ஊட்டி: ஊட்டியில் வரதட்சணை கொடுமையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸ்காரர் வினித் பாலாஜி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து, குன்னூர் சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினித் பாலாஜி(29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி, என்ஜிஜிஒ., காலனியை சேர்ந்த கார்த்திகைவேல் என்பவரின் மகள் முத்து பாண்டீஸ்வரி (25)க்கும்  கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் தம்பதிகள் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். வினித் பாலாஜி, வரதட்சணை மற்றும் மோட்டார்சைக்கிள் கேட்டு முத்து பாண்டீஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்து பாண்டீஸ்வரி, கடந்த 7ம் தேதியன்று காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலேயே தங்களது மகள் முத்து பாண்டீஸ்வரி இறந்ததாகவும், தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முத்து பாண்டீஸ்வரியின் தந்தை கார்த்திகைவேல் மற்றும் உறவினர்கள் ஊட்டி ஜி1 காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில், முத்து பாண்டீஸ்வரி இறந்த நிலையில் ஆர்டிஓ, விசாரணையும் நடந்தது. இந்நிலையில், காவலர் வினித் பாலாஜி, அவரது தந்தை ராதாகிருஷ்ணன், தாய் கவிதா ஆகியோரை ஊட்டி பி1 போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இன்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.