25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது.

1996-இல் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், கதிர் இயக்க அப்பாஸ், வினீத், தபு உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ’காதல் தேசம்’. காதலுக்கும் நட்புக்கும் இடையேயான கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமத்திருந்தார். பாடல்கள் பெரும் ஹிட்டானது. அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் பெரும் வெற்றி பெற்றது.

பழைய திரைப்படங்கள் மறு வெளியீடு காணப்படுவதன் வரிசையில் அண்மையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனும் இணைந்திருக்கிறார். இவர், காதல் தேசம் திரைப்படத்தை ’பிரேம தேசம்’ என்ற தலைப்பில், மெருகேற்றப்பட்ட வெளியீடாக ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். அந்த வகையில், ‘பிரேம தேசம்’ கடந்த 9-ம் தேதி தெலுங்கில் வெளியானது. நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படமும் மறு வெளியீடு காண இருக்கிறது. திரைத்துறையை பீடித்திருக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் தற்போது உருவாகியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.