பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாநேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பஸ் நிலையம் அமைத்துள்ளனர். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல; தனி நபர்கள் கோயிலுக்காக தங்களது நிலங்களை தானமாக எழுதி கொடுத்தவைதான் அவை.

இக்கோயிலுக்குச் சொந்தமான 31 ஏக்கர் நிலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அந்நிலத்தை தொட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்.

இந்து கோயில்களை அழிக்கும் வகையில்தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் செயல்படுகின்றனர். இந்த அரசு, அயோத்தியா மண்டபத்தை அபகரித்த வழக்கு, பட்டினப் பிரவேசம் ஆகிய விஷயங்களில் வலுவான அறை வாங்கி உள்ளது.

பூந்தமல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும். அந்த இடத்தில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் அமைய உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அந்த அலுவலகத்தை அங்கு அமைக்கக் கூடாது.

கோயில் நிலங்களை அரசோ, காவல் துறையோ ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. இந்து கோயில் நிலங்கள் அபகரிப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here