தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

”ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்பட்டு, முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும்.

சிறுபான்மையினப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் நவம்பரில்தான் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த ஆண்டு எப்பொழுதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும்.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் பட்சத்தில் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழை காரணமாக பல்வேறு அரசுப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்து ஏற்கெனவே அறிக்கை கோரப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் இதுகுறித்து ஆய்வை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் உரிய வசதிகள் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.