ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே புறநகர் பகுதியான சங்கம் இட்கா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் இருந்தனர். வகுப்புகள் ஆன்லைனில் நடப்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. காலை 11.15 மணியளவில் அந்தப் பள்ளியில் துப்பாக்கிகளோடு இரண்டு தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர். தலைமை ஆசிரியர் சுபுந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இருவரும் இறந்தனர்.

தகவல் அறிந்து போலீஸாரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணி நடக்கிறது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் கூறுகையில், ‘‘இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை விரைவில் அம்பலப்படுத்துவோம்’’ என்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.