திருப்போரூர் / காஞ்சிபுரம்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று முதலே ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து மொட்டை அடித்து பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், வேல் தரித்தும் நான்கு மாடவீதிகளில் வலம் வந்தனர். பல்வேறு கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திருப்போரூர் வினாயகர் கோயிலில் இருந்து 1,008 பக்தர்கள் பால்குடம் சுமந்து நான்கு மாடவீதிகளிலும் ஊர்வலமாக வந்து கந்தசுவாமி திருக்கோயிலை அடைந்தனர். அங்கு முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷத்துடன் பாலாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் விரைவு தரிசனம் மேற்கொள்ளும் வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் திருக்கோயிலை ஒட்டி உள்ள சரவணப்பொய்கையில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் படிக்கட்டுகளில் நின்றபடி குளத்தில் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி மிதக்கவிட்டு வழிபாடு நடத்தினர்.

தைப்பூச உற்சவம் இரண்டாம் நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரதத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஏகம்பரநாதர், மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

குடமுழுக்கு: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் சோமங்கலம் கிராமத்தில் 950 வருடங்கள் பழமை வாய்ந்த சவுந்திரவல்லி தயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் குடமுழுக்கு விழா நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டதால், புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி பாலாலய சம்ப்ரோக் ஷ்ணம் செய்யப்பட்டது. மேலும் புனரமைப்பு பணிகளும் அன்மையில் நிறைவடைந்து கோயில் குடமுழுக்கு விழா பணிகள் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கின.

பூர்ணாஹூதி, யாக சாலை நிர்மாணம் முதலியவை நடைபெற்றன. பிப்ரவரி 2-ம் தேதி புண்யாஹவாசனம், கும்ப திருவாராதனம், அஷ்ட பந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோயில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.