புரத சத்து நிறைந்த கருங்கோழிகளை வளர்ப்பதற்காக அதன் குஞ்சுகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாபுவா கலெக்டர் அனுப்பி வைத்தார். மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனத்திற்கு,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி  2,000 கருங்கோழி எனப்படும் கடக்நாத் கோழிக் குஞ்சுகளை ஆர்டர் செய்தார்.

இதுகுறித்து ஜாபுவா மாவட்ட ஆட்சியர் சோமேஷ் மிஷ்ரா கூறுகையில், ‘தோனி ஆர்டர் செய்த 2,000 கடக்நாத் குஞ்சுகள் அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு வாகனத்தில் அனுப்பப்பட்டன. தோனி போன்ற பிரபலங்கள் கடக்நாத் கோழிகளை வளர்க்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் கோழிக்குஞ்சுகளை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதன் மூலம் இந்த குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பழங்குடியின மக்கள் பயனடைவர்’ என்றார்.

தொடர்ந்து ஜாபுவா கிரிஷி அறிவியல் கேந்திராவின் பொறுப்பாளர் டாக்டர் தோமர் கூறுகையில், ‘புரத சத்து நிறைந்த கருங்கோழிகளை வளர்ப்பதில் தோனிக்கு அதிக ஆர்வம் உள்ளது. கடந்த காலத்தில் கொஞ்சம் ஆர்டர் செய்திருந்தார். பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக அந்த நேரத்தில் கருங்கோழிகளை வழங்க முடியவில்லை. தற்போது ராஞ்சிக்கு அனுப்பப்பட்ட 2,000 குஞ்சுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தோனியின் பண்ணையில் வளர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.