திமுக வன்முறையைக் கண்டித்தமைக்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், திருமாவளவனுக்கு எனது அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமாவளவன் “தன்இயல்பாக மேடைகளில் அவதூறு பேசியதை எதிர்த்ததாக அப்பகுதியில் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கூட, கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்றே நினைக்கிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து சீமான் ட்வீட் செய்துள்ளார்.
தருமபுரியில் நடந்தது என்ன? சில தினங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத்தான் திருமாவளவன், கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.