சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை இயக்கப்படாததால் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் முன்பு 8 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்போது 2 ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “கரோனா ஊரடங்கில் தற்போது அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. அந்த சமயத்தில் 8 பெட்டிகள் கொண்ட மெமூ அல்லது 9 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன.

அரக்கோணம் வழித் தடத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதி இல்லாததால், வருவது 8 பெட்டிகளைக் கொண்ட ரயிலா அல்லது 12 பெட்டிகள் கொண்ட ரயிலா என தெரிவதில்லை.

இதனால், 12 பெட்டி கொண்ட ரயிலில் ஏறுவதற்கு வசதியாக சிலர் நடைமேடையின் பின்னால் நிற்பர். அப்போது, 8 பெட்டிகள் கொண்ட ரயில் வந்தால், பயணிகள் நடைமேடையின் முன்பக்கம் ஓடிச் சென்று ஏற வேண்டியுள்ளது. குறிப்பாக, பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் தற்போது அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. அதேபோல், அரக்கோணம் வழித்தடத்திலும் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளாக இயக்கப்பட வேண்டும்” என்றனர்.