அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு அதிமுக உறுப்பினர் கண்ணன், சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அரியலூர் நகராட்சிக்கு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அதிமுக உறுப்பினர் திமுகவில் இணைந்திருப்பதால் துணைத் தலைவர் பதவி பேசும் பொருளாக உள்ளது. அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கான தேர்தல் நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, திமுக மற்றும் அதிமுக தலா 7 வார்டுகளை கைப்பற்றியது.
திமுகவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், 3 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரு சீட் வழங்கப்பட்ட நிலையில், ஓரிரு நாளில் மதிமுகவுக்கு ஒரு சீட் என உறுதி செய்யப்பட்டது. ஆனால், மதிமுக சார்பில் 12-வது வார்டில் மதிமுக நகரச் செயலாளர் மனோகரன் மனைவியும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான மலர்கொடி வேட்பு மனு தாக்கல் செய்தார். மதிமுகவுக்கு ஒரு சீட் தான் என அறிவித்த பின்னரும், மலர்கொடி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
இதையடுத்து திமுக-வில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற 3 பேர் திமுக-வுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து நடைபெற்ற நகராட்சி தலைவர் தேர்தலில் 10 வாக்குகளை திமுக-வும், 8 வாக்குகளை அதிமுகவும் பெற்றது. இதில்,திமுகவை சேர்ந்த சாந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில் அதில் 2 பேர் துணைத் தலைவர் பதவியை கேட்டதாக கூறப்பட்ட நிலையில், யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், திமுக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் துணைத் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க நகராட்சி அலுவலகம் வரவில்லை. இதனால், 50 சதவீத உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் மறுதேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அறிவித்தார்.
இதனிடையே இன்று வரை துணைத் தலைவர் யார் என்ற கேள்வி அனைத்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 4 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற கண்ணன், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் சென்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நேற்று (மார்ச் 18) இணைந்தார். அவருக்கு ஸ்டாலின் கட்சி வேட்டியை சால்வையாக அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் நகராட்சியில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் திமுகவுக்கு ஆதரவளித்தனர். தற்போது, அதிமுகவை சேர்ந்த ஒருவரும் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் துணைத்தலைவர் பதவியினை 4 பேர் எதிர்பார்க்கின்றனர் என அரியலூர் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.