காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொன்றையும் வி்ற்றுவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், எம்.பி. தீபேந்தர் ஹூடா, மாணவர் பிரிவு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலுக்குப்பின் மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் விமர்சித்தன. ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.

https://www.facebook.com/METROPEOPLENEWS/

காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் கடின உழைப்பால் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை பாஜக கடந்த 7 ஆண்டுகளில் அனைத்தையும் விற்றுவிட்டது.

பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் ஏதும் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து ஊடகங்கள் விமர்சித்தன. அதற்கு முரணாக ஊடகங்கள் இப்போது செயல்படுகின்றன.

இந்தியாவின் எல்லை அமைந்துள்ள லடாக் பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதேபோன்று சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஊடகங்கள் விமர்சிக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டை அழித்துவிட்டது என்று விமர்சிப்பார்கள். ஆனால், இப்போது பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து மவுனமாக இருக்கின்றன.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.