தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அரசு எனும் பெயரை மத்திய அரசு பெற்றிருக்கிறது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு, மரபுப்படி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது அமிர்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான காலகட்டமாக அடுத்த 25 ஆண்டுகள் திகழ உள்ளன. வரும் 2047க்குள் வளர்ந்த நாடாக நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நமது கடந்த கால பெருமிதத்தை நவீனத்துடன் இணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.

நாம் உருவாக்க உள்ள இந்தியா என்பது தற்சார்பு கொண்டதாகவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய இந்தியாவில் ஏழ்மை இருக்காது. நடுத்தர மக்களும் அனைத்தையும் பெற்றிருப்பார்கள். இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை துடிப்பானது. நமது நாட்டின் ஒற்றுமை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாதது.

வேலையே கடவுள் என்றார் பகவான் பசவேஸ்வரர். அதாவது, நாம் செய்யும் வேலையில் கடவுளும் இருக்கிறார். அவர் காட்டிய வழியில் கடமையை உணர்ந்து எனது அரசு முழுமூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நிலையான அரசை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அரசு, நாட்டின் நலனையே பிரதானமாகக் கருதி செயல்பட்டு வருகிறது. அதற்கேற்பவே, கொள்கைகளையும் வியூகங்களையும் முற்றிலுமாக மாற்றி உள்ளது.

துல்லிய தாக்குதல் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் வரை, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முதல் அமலில் உள்ள உண்மையான எல்லை வரை, சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் நீக்கம் வரை எனது அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியது என்றஅங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. எனது அரசு நிலையானது, அச்சமற்றது, தீர்க்கமானது, மிகப்பெரிய கனவுகளை நனவாக்க உழைக்கக்கூடியது. இன்று இந்தியாவின் நேர்மை மதிப்புக்குரியதாக உள்ளது. ஏழைகளை மேம்படுத்துவதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.